top of page

நிறைவேறாத ஆசையும் நிறைவேற்றவேண்டிய பணியும்

அ.ராமசாமி

புதுவைப் பல்கலைக்கழக நாடகத்துறையில் பணியாற்றிய நான் நெல்லை மனோன்மணியம்

சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைக்கு விரும்பியே வந்தேன்(1997 பிப்ரவரி 14)

வந்த முதலே கி.ராஜநாராயணனைப் பல்கலைக்கழகத்திற்கு அழைக்கும் முயற்சிகளை

ஒவ்வொரு ஆண்டும் செய்தேன். நான் செய்தேன் என்பதைவிடப் பல்கலைக்கழகத்தின்

துணைவேந்தர்கள் என்னைச் செய்யத்தூண்டினார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

தமிழியல் துறையை ஆரம்பித்து என்னை முதல் முழுநேர ஆசிரியராகத் தேர்வுசெய்த

துணைவேந்தர் முனைவர் வே.வசந்தி தேவி முதலில் தூண்டினார். “ஆறு மாதம் முதல்

ஓராண்டு வரை நமது பல்கலைக்கழகத்திலும் அவர் வருகைதரு பேராசிரியராக நியமிக்க

முடியும்; வருவாரென்றால் ஏற்பாடு செய்வோம்” என்றார். அவரது விருப்பத்தைக் கி.ரா.விடம்

தெரிவித்தேன். புதுவைக்குப் போன பின்பு திரும்பவும் கோவில்பட்டிக்குத் திரும்புவதில்லை

என்ற முடிவை மனதளவில் எடுத்திருந்ததால் அந்த அழைப்பை அவர் ஏற்கவில்லை. ஒரு

கருத்தரங்கிற்காகவாவது அழைத்துவிடலாம் என்று 1998 இல் பெண்ணியம்: கோட்பாடும்

தமிழ்ச்சூழலும் என்ற கருத்தரங்கின் தொடக்கவிழாவிற்கு அழைத்தோம். அதையும்

உடல்நிலையைக் காரணம்சொல்லித் தவிர்த்து விட்டார். அதனால் அந்த முயற்சியையே

கைவிட்டுவிட்டேன்.



நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்குக் கி.ரா.வை அழைக்கும்

முயற்சிகள் துணைவேந்தர் வே. வசந்திதேவி காலத்தில் மட்டுமே நடந்தது என்பதில்லை.

துணைவேந்தராகப் பேராசிரியர் க.ப. அறவாணன் அவர்கள் இருந்தபோதும்

முன்னெடுக்கப்பட்டது. தமிழியல் ஆய்வுகளில் அண்மைப்போக்குகள் என்றொரு கருத்தரங்கை 2002 இல் திட்டமிட்டோம். அப்போது துறையின் தலைவராக இருந்தவர் பேரா.

தொ.பரமசிவன். அதன் தொடக்கவிழாவிற்குப் பல்கலைக்கழக எல்லைக்குட்பட்ட மூன்று

மாவட்டங்களைச் சேர்ந்த எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்களை அழைத்திருந்தோம்.

தொடக்க விழாவில் ஓர் எழுத்தாளரின் சிறப்புரையும், ஆய்வாளர் ஒருவரின் தலைமையுரையும் என்பது திட்டம். சிறப்புரைக்காக கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி, தோப்பில் முகம்மது மீரான் என்ற மூன்று பேரில் அதே வரிசையில் அழைக்க முயற்சி செய்யலாம் என்ற திட்டப்படி முதலில் கி.ரா.வைத் தொடர்புகொண்டோம். அவரது வட்டார வழக்குச் சொல்லகராதி திட்டத்தை பல்கலைக்கழகப் பரப்பு முழுமைக்கும் விரிக்கும் திட்டம் இருக்கிறது; அதில்எ ங்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் பொறுப்பில் உங்களைப் பல்கலைக்கழகம் சிறப்பு ஆலோசகராக அமர்த்த விரும்புவதாகத் தொலைபேசியில் சொன்னேன். வழக்கம்போலத்தூ ரத்தைக் காரணம் சொல்லி கி.ரா. மறுத்துவிட்டார்.


கி.ரா. வராத நிலையில் சுந்தர ராமசாமியைத் தொடர்புகொண்டோம். சு.ரா. ஒத்துக்

கொண்டார். தொடங்குவதற்கு முன்பே வந்து துறையின் ஆசிரியர்களோடு உறவாடித்

துறையின் போக்கைத் தெரிந்துகொண்டு நிறைவான சொற்பொழிவொன்றைத் தந்தார்.

தனக்கு ஆய்வுகள் மீதிருக்கும் வருத்தங்களையும், சமகாலத்திற்கு வராமல் சில

பத்தாண்டுகளுக்கு முன்பே தங்கிவிடும் இலக்கியத்துறைகளுக்கு மாறாகச் சில நம்பிக்கைகளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வெளிப்படுத்துகிறது என்று குறிப்பிட்டுப் பேசினார்.


பின்னர் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப்பேரவையில் சமூக ஆர்வலர்/ எழுத்தாளர்/ பத்திரிகையாளர் என்ற வகைப்பாட்டில் ஒருவர் நியமனம் செய்யப்படும் வாய்ப்பு வந்தபோது பேராசிரியர் தொ.பரமசிவன் அவர் பெயரை முன்மொழிந்து அனுப்பினார். அனுப்பிச் சில ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் நியமனம் செய்யப்பட்டார். ஒரிரண்டு கூட்டங்களுக்கு வந்தார். ஆனால் அந்த நடைமுறையில் தன்னைப் போன்ற எழுத்தாளர்கள் என்ன பங்களிப்பு செய்யமுடியும் என்பதில் இருந்த குழப்பத்தால் பின்னர் கலந்துகொள்வதைத் தவிர்த்துவிட்டார்.

கி.ரா.வின் தொண்ணூற்றைந்தாவது பிறந்தநாள் விழாவைப் புதுவைப் பல்கலைக்கழகத்தில்

கொண்டாடிய நிலையில் அவரது படைப்புகள் குறித்து ஒரு விரிவான கருத்தரங்கம் ஏற்பாடு

செய்து அவரை அழைக்கலாம் என்று முயற்சி செய்தோம். அப்படி அவர் வரும் நிலையில்

கி.ரா.வின் பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவத் தயாராக இருப்பதாக வழக்குரைஞர்

கே.எஸ். ராதாகிருஷ்ணன் சொல்லியிருந்தார். அவரது பொறுப்பில் இருக்கும் கரிசல்

அறக்கட்டளை சார்பில் அதற்கான நிதி வழங்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். அதுவும்

நடக்கவில்லை. கடைசியாக 2017 இல் பல்கலைக்கழகம் வழங்கும் உயரிய விருதான

பேரா.சுந்தரனார் விருதை வழங்கிச் சிறப்பிப்பது என்று முடிவெடுத்துப் பல்கலைக்கழகத்திற்கு அழைத்தோம். அவரும் வருவதாக ஒத்துக் கொண்டார். அப்போது துணைவேந்தராக இருந்த பேரா.கி.பாஸ்கரும் மிகுந்த மகிழ்ச்சியோடு காத்திருந்தார்.


பேராசிரியர் சுந்தரனார் விருது 2013 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அப்போதைய துணைவேந்தர் முனைவர் அ.க. குமரகுருவின் முயற்சியில் ஓர் அறக்கட்டளை நிறுவப்பட்டு, அதன் வைப்புத்தொகையாக ரூ .25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்ட து. அதன் வட்டித் தொகையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் தமிழ்மொழி, இலக்கியம், வரலாறு, பண்பாட்டுத்துறையில் சிறப்பான பங்களிப்பு செய்பவருக்கு ஒரு லட்சம் பணமுடிப்பும் ஒரு பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. தொடங்கப்பட்ட ஆண்டுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளிலும் பேராசிரியர்களுக்கே அவ்விருது வழங்கப்பட்டது. அதனைக் கொஞ்சம் திசை திருப்பி, வருகைதரு பேராசிரியராகவும் படைப்பாளியாகவும் விளங்கிய கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு வழங்குவது என்ற முடிவை எடுத்தபோது பலரும் பாராட்டினார்கள். அதேநேரம் சிலரிடமிருந்து எதிர்மறைக்கருத்துகளும் வந்தன. பொதுவாக எதிர்மறைக்கருத்துடையவர்களுக்கு அவரது மொழி. இலக்கியப்பங்களிப்பு என்ன என்பது தெரியாமல் இருந்தது. அதனால் விழா அழைப்பிதழோடு அவரது பங்களிப்புகள் குறித்த சிற்றேடு ஒன்றைத்தயாரித்து அனைவருக்கும் வழங்கினோம்.


ஒரு லட்சம் விருதையும் பாராட்டுச் சான்றிதழையும் பெற்றுக்கொள்ள நேரில் வருவேன்; என்னைப் புதுச்சேரிக்கே வந்து அழைத்துச் சென்று திரும்பவும் புதுச்சேரியில் கொண்டுவந்து விடும் பொறுப்பை கழனியூரன் ஏற்றுக்கொண்டுள்ளார் என்று கடிதம் எழுதினார். கழனியூர் என்பது பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதியில் இருக்கும் ஒரு சிற்றூர். அந்த ஊரின் பெயரைத் தனது புனைபெயராகக்கொண்ட கழனியூரன் கி.ரா.வின் நாட்டுப்புறக்கதைத் தொகுப்பு வேலையிலும் வட்டார வழக்குச் சொல்லகராதி உருவாக்கத்திட்டத்திலும் பங்கேற்றவர். அவரது கதைசொல்லி இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர். அவரும் என்னிடம் சொல்லிவிட்டுப் புதுவைக்குக் கிளம்பிப்போனார். கி.ரா. பல்கலைக்கழகத்திற்கு வரப்போகிறார் என்ற மகிழ்ச்சியில் எல்லா வேலைகளையும் செய்திருந்தோம். சிறப்பு அழைப்பாளராக அந்த ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்ற வண்ணதாசன் அழைக்கப்பட்டார். வண்ணதாசனும் கி.ரா.வும் அன்பால் நெருங்கியவர்கள். வண்ணதாசனின் தந்தை தி.க.சி. காலம் தொடங்கிக் குடும்ப நட்புகொண்டவர்கள். மகிழ்ச்சியோடு அவரும் ஒத்துக்கொண்டார்.


எல்லா மகிழ்ச்சியும் விழாவிற்கு முந்திய நாள் முடிந்துபோனது. தனிக் கார் ஒன்றில் பயணம்

செய்து நெல்லைக்கு வரும் ஏற்பாட்டிற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனைக்காகச்

சென்றபோது “இப்போது பயணம் செய்வது நல்லதல்ல; முடிந்தால் ரயில் பயணம்

மேற்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டதாகவும், உடனடியாக ரயிலில் சிறப்பு இருக்கைகள்

பெற இயலவில்லை; எனவே மகன் பிரபியும் கழனியூரனும் வருகிறார்கள்; மன்னிக்கவும்”

என்று தொலைபேசியில் சொல்லிவிட்டார்.


பெரும் ஏமாற்றமாகப் போய்விட்டது. துணைவேந்தருக்கு எப்படிச் சமாதானம் சொல்வது என்பதுதான் பெரிய சிக்கல். அவரது ஏமாற்றத்தைத் தீவிரமாகக் காட்டினார். விழாவை ஒருவாரம் தள்ளிவைக்கலாம் என்றார். ஆனால் அப்போதும் அவர் வருவார் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்பது எனக்குத்தெரியும். எனவே துணைவேந்தரைச் சமாதானப்படுத்தி விழாவை நடத்தி பணமுடிப்பை அவரது மகனிடம் வழங்கி அனுப்பிவைத்தோம். எழுத்தாளர்களை பாராட்டுவது என்பது எழுத்திற்காகத்தானே என்ற தேற்றுதலோடு அவருக்குப் பேரா.சுந்தரனார் விருது 2016 -2017 ஆம் கல்வியாண்டில் வழங்கப்பட்டது.


கி.ரா.வின் சொந்தக் கிராமம் இடைசெவல். அந்தக் கிராமத்தை உள்ளடக்கிய பகுதியில் இருக்கும் பல்கலைக்கழகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம். அதன் வளாகத்திற்குள் ஒருதடவையாவது அழைத்துவந்துவிட வேண்டும் என்று நினைத்த எனது நினைப்பும் பல்கலைக்கழகத்தின் ஆசையும் கடைசி வரை நிறைவேறவே இல்லை. என்றாலும் அவரது நாவல்களையும் சிறுகதைகளையும் பாடமாக்கிக் கற்பித்துக் கொண்டிருக்கிறது. முனைவர், ஆய்வியல் நிறைஞர் போன்ற பட்டங்களுக்கு ஆய்வாளர்கள் ஆய்வுசெய்து முடித்துள்ளார்கள். பாட த்திட்டத்தின் பகுதியாக வைத்து மாணாக்கர்களுக்குக் கற்பிக்கிறது.


1989 கல்வியாண்டின் தொடக்கத்தில் புதுவைப்பல்கலைக்கழகத்தில் வருகைதரு

பேராசிரியராகப் பணியைத் தொடங்கிய கி.ரா. வுக்கு முதல் வழங்கப்பட்ட காலம் மேலும்

ஓராண்டு நீட்டிக்கப்பட்டது. அந்தக் காலத்திலும் அவர் தொடங்கிய தொகுப்பு மற்றும்

பதிப்புப்பணிகள் நிறைவடையவில்லை. புதுவை வட்டார நாட்டுப்புறக் கதைகளையும்,

பெண்களின் மனவுணர்வுகள் வெளிப்படும் கதைகளையும் தொகுத்துப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கியதோடு தனது பணி முடிந்துவிட்டது எனக் கிளம்பிவிடவில்லை. புதுவையிலேயே தங்கிப் பல்கலைக்கழகத்தின் அனுமதியுடன் அவற்றைத் தனது நூல்களை வெளியிடும் பதிப்பகங்கள் மூலம் நூல்களாகவும் வெளியிட்டார்.


தொடர்ச்சியாகப் புதுவையிலேயே தங்கிவிடுவது என்று முடிவெடுத்தபோது தனது இருப்புக்கான காரணங்களை நிறுவும்விதமாக அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கும்

பணிகளை ஆரம்பித்தார். அப்பணியில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் தாகூர்

கலைக்கல்லூரியில் இயங்கிய பட்டமேற்படிப்பு மையப்பேராசிரியர் முனைவர் க.பஞ்சாங்கம்

ஆவார். கரிசல் அறக்கட்டளை என்ற பெயரில் கி.ரா. தொடங்கிய அவ்வறக்கட்டளையின்

பணிகளாகச் சிலவற்றை அவர் வரையறை செய்தார்.

  • பேச்சுத்தமிழுக்கும் எழுத்துத்தமிழுக்கும் இடையே நிலவும் வேறுபாடுகளைக் குறைத்து எழுத்துத்தமிழுக்குரிய மரியாதையை பேச்சுத்தமிழுக்கும் பெற்றுத் தருவது. அதற்காக வட்டார வழக்குச் சொல்லகராதிகளை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொள்வது. கோவில்பட்டியில் இருந்தபோது கரிசல் வட்டாரச் சொற்களைத் தொகுத்து வெளியிட்டதுபோலப் புதுவை வட்டாரச் சொல்லகராதியை வெளியிடும் முயற்சியை மேற்கொள்வது என்பது அதன் நீண்ட காலத்திட்டம்.

  • இரண்டாவதாகக் கரிசல் அறக்கட்டளையின் சார்பில் ‘கதைசொல்லி’ என்னும் எண்வழிச் சிற்றிதழை வெளியிடுவது. எண் வழிச்சிற்றிதழ் என்பது குறிப்பிட்ட காலத்தை – வார இதழ், மாத இதழ், காலாண்டு இதழ் போலக் காலக்கணக்கு வைத்து வெளியிடும் விதமாக இல்லாமல் இதழின் பணிகள் நிறைவுற்ற நிலையில் இதழை அச்சிட்டுத் தபால் வழியாக அதன் சந்தாதாரர்களுக்கும் வாசகர்களுக்கும் அனுப்பும் முறையைக் கைக்கொள்ளுதலாகும். இதழின் உள்ளடக்கத்திற்காகக் காத்திருத்தல், விளம்பரத் தேவைக்காகக் காத்திருத்தல் போன்றவற்றைக் கைவிட்டுவிட்டு ஆசிரியர் குழுவின் விருப்பம்போல இதழை வெளியிடுவது என்ற நோக்கம் அதற்கிருந்தது. ஏறத்தாழ கால்நூற்றாண்டுக் காலம் புதுவையிலிருந்து வெளிவந்த கதைசொல்லியில் கி.ரா.வோடு அவ்வப்போது பலரும் இணைந்து இயங்கினார்கள். ஆரம்பநிலையிலிருந்தே பேரா.க.பஞ்சாங்கத்தின் பங்களிப்பு இருந்தது. அதேபோல கரிசல் அறக்கட்டளையின் பொறுப்புகளைக் கவனித்துக்கொண்ட வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணனும் தனது எழுத்துகளைக் கதைசொல்லி வழியாக வெளியிட்டார். நாட்டுப்புறக்கதைகளைத் தொகுப்பதில் கி.ரா.வுக்குத் துணையாக இருந்த கழனியூரனும் பாரத தேவியும் அவ்விதழில் எழுதியவர்களில் முக்கியமானவர்கள். புதுவையிலிருந்த எழுத்தாளர்களில் பிரேம் – ரமேஷ் ஆகியோர் கதைசொல்லியில் அதிகமாகப் பங்களிப்பு செய்தனர். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ப்ரேம் தில்லிப்பல்கலைக்கழகத்திற்குச் சென்றபிறகு அவரது பங்களிப்பு இல்லை. கி.ரா.வைத் தினசரி சந்தித்துவிடக்கூடிய வெங்கடசுப்பா நாயகர் போன்றோரும் மொழிபெயர்ப்பு வழியாகக் கதைசொல்லியில் எழுதினர்.

  • கரிசல் அறக்கட்டளையின் மூன்றாவது பணி முன்னிரண்டையும்விடச் சிறப்பானது. தமிழ் இலக்கியத்திற்கும் மொழிக்கும் பங்களிப்புச் செய்யும் சிறுபத்திரிகைகளின் வளர்ச்சிக்கு உதவுவது. ஆண்டுதோறும் ஒரு சிறுபத்திரிகையைத் தெரிவு செய்து அதனைத் தொடர்ந்து வெளியிடும் வகையில் பண உதவி செய்தார். முதல் ஆண்டு குன்றம் ராமரத்நம் அவர்கள் நடத்திய தாரமதி இதழுக்கு வழங்கப்பட்ட து. தொடர்ந்து முங்காரி, சுந்தர சுகன், கனவு, கவிதாசரண், உன்னதம், திசை எட்டு, சதங்கை, கோடு, மாந்தன், புதுவைபாரதி, ரசனை, புதிய கோடங்கி, உயிர்மை, தாமரை, செம்மலர், மந்திரச் சிமிழ், மணல்வீடு முதலான இதழ்களுக்கு வழங்கப்பட்டதாக ஒரு குறிப்பொன்றை எழுதிவைத்திருந்தார். நான் புதுவையில் இருந்தபோது ஊடகம் என்றொரு சிற்றிதழ் எனது இல்ல முகவரியிலிருந்து வந்தது. ஆரம்பித்த இரண்டாவது ஆண்டில் அதற்கு உதவலாம் என்ற நோக்கில் என்னிடம் சொன்னார். ஆனால் நாங்கள் அந்த ஆண்டே இதழை நிறுத்திவிட்டோம் என்பதால் அவரது விருப்பத்தை நிறைவேற்ற இயலவில்லை.

புதுவையில் பாரதி என்றொரு நூல் எழுதப்பட்டதுபோலப் புதுவையில் கி.ரா. என்றொரு வரலாற்று நூல் எழுதப்பட வேண்டும். நான் எழுதும் குறிப்புகள் பெரும்பாலும் நான் அங்கிருந்த எட்டாண்டுகளில் அவரோடு பேசிய தகவல்களையும், பிறகு அவ்வப்போது புதுச்சேரிக்குச் சென்றபோது அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டவையே. அவையெல்லாம் பெரும்பாலும் வாய்மொழித் தகவல்களே. நான் புதுவையிலிருந்து வந்தபின் கால் நூற்றாண்டுக்காலம் அங்கு வசித்துள்ளார். அவை முறையான தகவல்களைத் திரட்டி எழுதப்படவேண்டும். அவருக்கு

நாட்குறிப்புபோல எழுதும் பழக்கம் உண்டு. அவற்றை விரிவாகப்பரிசீலனை செய்து 32

ஆண்டுப்புதுவை வாழ்க்கையைப் (1989 முதல் 1921 வரையில்) பதிவுசெய்ய வேண்டும்.

அதற்கு அவரது புதல்வர் பிரபாகரன் முன் முயற்சி எடுக்கவேண்டும். இது நிறைவேற்றக்

கூடிய ஆசை. அதில் என்னையும் இணைத்துக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.


 

Comments


கி.ராஜநாராயணன்.காம் © 2021 புதுவை இளவேனில்  |  தொடர்பிற்கு

bottom of page